பிறப்பும் குறிக்கோளும் | Origin and Purpose
ஒரு மனித பிறப்பிற்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட “குறிக்கோள்” (பிறப்பின் அர்த்தம்) என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவன் ஒரு நாளில் எழுந்தது முதல்உறங்க செல்லும் வரை செய்யும் நன்மைகள், தீமைகள், வேலைகள், கண்டுபிடிப்புகள் என்று எல்லாம் அன்றைய நாளை அவன் கடத்துவதற்க்காக மட்டுமே.
தெளிவுபடுத்த வேண்டுமென்றால், ஒருவனது முதல் குறிக்கோள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்பது. அத்துடன் குறிக்கோள் முடிவதில்லை. படிப்பிற்கு ஏற்ற நல்ல வேலை வேண்டும் என்று அடுத்த குறிக்கோள். அதனுடனும் குறிக்கோள் முடியவில்லை. வேலைக்கேற்ப சம்பளம் பெறவேண்டும் என்று ஒரு குறிக்கோள். அதை அடைந்தபின்னும் குறிக்கோள் முடியவில்லை. அதன் பின் திருமணம், குழந்தைகள், குழந்தைகளின் படிப்பு, வசதிக்கு ஏற்ப சொந்த வீடு,நிலம், வாகனம், ஆடை மற்றும் ஆபரணங்கள், மேலும் தாய், தந்தை, மனைவி பாதுகாப்பு என்று உடலில் வழு இருக்கும் வரை அழைத்து பின் முதுமையில் நிம்மதியான வாழ்க்கை போதும் என்றும், நோயற்ற வாழ்க்கை போதும் என்றும், இறைவன் திருவடி போதும் என்று அவனுக்கு அவனே இலக்குகளை நிர்ணயித்து, குறிக்கோளுடன் வாழ்வதாக தன் வாழ்நாட்களை கடத்துகிறான். இந்த மேற்கண்ட குறிக்கோள்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் பொருளாதாரம் மற்றும் வேறு காரணங்களை பொறுத்து “குறிக்கோள்கள்” கூடியும் இருக்கும், குறைந்தும் இருக்கும்.
மேலும் இவையெல்லாம் ஒரு பிறப்பிற்கான குறிக்கோளோ, அர்த்தமோ கிடையாது. இவையெல்லாம் மனிதனின் ஆசைகள். ஆசைக்கு அளவு கிடையாது. ஆசைக்கு ஆரம்பம் உண்டு. முடிவு இருப்பதாக தெரியவில்லை. ஆனால், குறிக்கோளுக்கு அளவீடுகள் பொருந்தும். ஒரு குறிக்கோளை அடைந்தவுடன் அது முடிவடைகிறது.
அப்படிப் பார்த்தால், மனிதன் பிறப்பிற்கு என்று ஒரு குறிக்கோள் இருக்குமேயானால், அந்த குறிக்கோளை அடைந்தவுடன் அவனின் அந்த பிறப்பு முடிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியும் முடிவதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை அவன் வாழ்கிறான்.
ஆகையால், என்னுடைய தனிப்பட்ட கருத்து மனித பிறப்பிற்கு என்று எந்த குறிக்கோளும், அர்த்தமும் கிடையாது.
Velu @ p2pdistrict.in
